4200 பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 4200 பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சிக்கான நியமன கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

தேசிய கொள்கைகள்,பொருளாதார விவகாரம், மீளகுடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அந்த அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, அமைச்சர் வஜிர அபயவர்தன, இராஜாங்க அமைச்சர் செயிட் அலி ஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பலர் கடந்துகொண்டார்கள்.

இதன்போது உரையாற்றிய பிரதமர், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதில் காலங்கடத்தப்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றும், இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறிய போது இருந்த பொருளாதார நெருக்கடியே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடந்த நான்கரை வருட சுற்றை கடந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2020 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது சுற்று பொருளாதார முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதற்கும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதற்குமான வியூகம் வகுக்கும் ஐந்தாண்டு திட்டமாக அமையும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.