யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைதாகும் முன் சிக்கிய இரகசியக் காணொளி வெளியானது

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ். இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கைது செய்யப்படுவதற்கு முன்னர் பெறப்பட்ட இரகசிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ். இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன் எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், இன்று மாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும் என்ற காரணத்தால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை பொலிஸ் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட முன் இலஞ்சம் பெற்றுக்கொண்மை குறித்த இரகசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சந்தேகநபரான அதிபர், நபர் ஒருவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டமை உறுதியாகியுள்ளது. குறித்த காணொளி தற்போது மிகவும் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.