உலகின் பிரபல நிறுவனத்திற்கு இப்படி ஒரு அவலமா..? திண்டாடும் இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள்

உலகின் பழமையான பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாம்ஸ் குக் நிறுவனம் நஷ்டமடைந்ததன் காரணமாக இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் பழமையான நிறுவனம் புகழ்பெற்றிருந்த குறித்த நிறுவனத்தின் 21,000 ஊழியர்களில் 9,000 பிரித்தானியர்கள் இப்போது தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

178 ஆண்டு பழமையான இந் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 200 மில்லியன் டொலர் கோரப்பட்டது.

இதுகுறித்து தோமஸ் குக் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

நிறுவனத்தை மீட்க கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும், பங்குதாரர்களுக்கும் புதிய பண வழங்குநர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏட்டப்படவில்லை.

எனவே நிறுவனத்தின் தலைமை ஆணையம், உடனடியாக நிறுவனத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியா நிறுவனமான தோமஸ் குக்கின் மிகப்பெரிய பங்குதாரரான சீனாவின் ஃபோசுன் குழு, நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தது தொடர்பில் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியது.

இதனையடுத்து, நிறுவனத்தின் அனைத்து விமான பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தோமஸ் குக் விமானத்தில் நாடு திரும்ப திட்டமிட்டு இருந்த சுமார் 150,000 பிரித்தானியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிறுவனம் நஷ்டமடைந்த நிலையில், பிரித்தானியாவில் சிவில் ஏவியேஷன் ஆணையமும், அரசாங்கமும் தோமஸ் குக் பயணிகளை புதிய விமானங்கள் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியாவில் இருந்த தோமஸ் குக் விமானத்தின் மூலம் பயணிக்க திட்டமிட்டிருந்த பயணிகள், வீட்டிலே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியா லட்சகணக்கான மக்களை மீட்க திட்டமிடுவதால், அமைச்சர்கள் சுமார் 40 பெரிய விமானங்களை இப்பணியில் ஈடுபடுத்த உள்ளதாக பட்டியலிட்டுள்ளனர்.

இப்போது உலகெங்கிலும் உள்ள விடுதிகளில் சிக்கித் தவிக்கும் நிறுவனத்தின் 400,000 வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலர் விடுதி நிர்வாகத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.