இந்நாட்டின் சட்டம் அப்பாவிகளையும், சிறுபான்மை மக்களையும் கட்டுப்படுத்த மட்டுமே, எம்மை கட்டுப்படுத்துவதற்கு இல்லை! என்பதை மீண்டும் ஞானசார தேரர்கள் உள்ளிட்ட பௌத்த பேரினவாதிகள் பாதுகாப்புத் தரப்பினரின் ஆதரவுடன் செய்து காட்டியுள்ளனர்.
அவர்களின் அடாவடியைத் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் சட்டத்தின் காவலர்களும் இல்லை. அரசியல்த் தலைமைகளும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
ஆலயத்துக்குள் இறுதிக்கிரியை ஏற்பாடு, நீதிமன்றத் தடை, நீதிமன்றத் தீர்ப்பு, தீர்ப்பை மீறிய அடாவடி நடந்தும் எமது அரசியல் தலைவர்கள் எவரும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லவில்லை. இதில் தலையிடக் கூடிய அதிகாரம் கொண்ட இந்து மத விவகார அமைச்சர் மனோ கணேசன் தேர்தல் பிசியினால் வாய்கூடத் திறக்கவில்லை.

இப்படியான நிலையில் தான் சட்டத்தரணிகளுடன், ஆலய நிர்வாகத்துடன் இணைந்து சம்பவ இடத்தில் சிறியளவிலான மக்கள் ஒன்று கூடித் தம்மாலான எதிர்ப்பை அமைதியாக வெளிக்காட்டி நின்றனர்.
பொலிஸார், கலகம் அடக்கும் பொலிஸார், இராணுவத்தினர், அதிரடிப் படையினர் அடாவடியில் ஈடுபடுவோர் சார்பாக இருக்கும் போது அங்கு கூடிய மக்களினால் எதிர்ப்பைக் காட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். அதுவே இன்று நடந்தேறியது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நீதிமன்ற அனுமதியுடன் தேரர் ஒருவரின் உடலை தகனம் செய்தனர். இன்று நீதிமன்றத் தீர்ப்பை மீறித் தமது திட்டத்தின் படி ஆலயத்தின் தீர்த்தக் கேணிப் பகுதியில் பலவந்தமாக தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டு, இனவாத வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளனர். அத்துடன் ஆலயத்தை முழுமையாக விகாரையாக மாற்றும் சூழ்ச்சிக்கான அடித்தளத்தினையும் வலுப்படுத்தி இருக்கின்றனர்.
இலங்கை குடியரசின் இறைமை மக்களுக்குரியது, அதில் உரிமைகளும் அடங்கும் என்று அரசியலமைப்பின் அத்-1-(2) ஒருபகுதி கூறுகின்றது. ஆனால் இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் அத்-2-(9) ஒரு பகுதி கூறுவதை வைத்துக் கொண்டு நீதிமன்றத் தீர்ப்பு இருக்கட்டும்.
இலங்கையில் தேரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் தெரியாதா? என்று இன்னுமொரு மதத்தின் உரிமையைப் பறித்து அவர்களுக்குப் புனிதமாக இருக்கும் ஆலயத்தில், ஆலயக் கேணிப் பகுதியில் இது பௌத்த பூமி என்று சொல்லி ஒரு உடலத்தை எரித்து அராஜகம் செய்வதற்கும் முன்னுரிமை உண்டு என்கின்றனர்.
இது என்ன நியாயம்?. பார்க்கும், இருக்கும் இடம்மெல்லாம் பௌத்த பூமி என்றால். பரந்த பல்வேறு நாடுகளைக் கொண்ட இந்த முழுமையான பூமியை யாருடையது என்று சொல்வார்கள்?.
பெளத்த மயமாக்கலை சூட்சுமமான முறையில் முன்னெடுத்து வந்த பௌத்த பேரினவாதிகள் இப்போது பரிணாம வளர்ச்சி பெற்று, தேரர்களின் உடலை வைத்தும் முன்னெடுக்கத் தொடங்கி விட்டனர். நாளை ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டு அந்த இடமே மிகப் பெரும் விகாரையாக, புனித பௌத்த பூமியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
இவர்களைச் சட்டம் எதுவும் செய்யப் போறதில்லை. ஒருவேளை சட்டம் தண்டித்தாலும் சட்டத்தை சாகடித்து பொது மன்னிப்பில் விடுதலை பெறும் அரிய வாய்ப்பும் அவர்களுக்கே உண்டு. ஏனெனில் ஆட்சியாளர்கள் அவர்களே!






