ஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தசாப்தங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் UNP யை விட்டு வெளியேறிய முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்த UNP பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்கனவே கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் , அது தொடர்பாக எழுத்துபூர்வமாகவும் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் உபாலி பியசேன நீண்ட காலத்திற்கு பின்னர் நேற்றையதினம் சிறிகொத்த தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்.
அத்துடன் தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் உள்ள முன்னாள் UNP பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மீண்டும் UNPயில் இணைய எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேறிய உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






