கோத்தபாய தொடர்பான உண்மையை வெளிப்படுத்தும் அமைச்சர்

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக கோத்தபாயவுடன் மிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஐ.தே.கவின் பிரச்சார கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது குறித்த விடயத்தை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் விமான படையை பாரிய இன்னல்களுக்கு நகர்த்திச் சென்றவர்கள் கோத்தபாயவும், உதயங்க வீரதுங்கவுமே. இவர்கள் எந்தவொரு அரச நிறுவனத்தையும் லாபகரமான நிறுவனமாக மற்றவில்லை.

அதற்கு மாறாக அந்த நிறுவனங்களில் கொள்ளையடித்தார்கள் என்பதே உண்மையாகும். அதனை தொடர்ந்து இராணுவத்திற்கு சொந்தமான இராணுவ தலைமை செயலகத்தை சொற்ப பணத்திற்காக விற்பனை செய்தார்கள்.

20 மில்லியன் பெருமதியான காணியை எட்டு மில்லியனுக்கு விற்றார்கள். அதன் மூலம் கிடைத்த கமிசன் பணத்தை கொண்டே தங்காலையில் சுற்றுலா விடுதிகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

இராணுவத்திற்கு இவ்வாறு செய்தவர்களா இராணுவ வீரர்கள் என்று பெயர் சூடிக் கொள்கிறார்கள்? அரச புலனாய்வு பிரிவை விரிவுப்படுத்துவதாக தெரிவித்து சுமார் 6000 ஆக இருந்த அவர்களை 12000 ஆக அதிகரித்தனர்.

இதன்போது இஸ்லாமிய கடும் போக்காளர்களையும், முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளையும் இணைத்து கொண்டார்கள். அதன் விளைவே நாம் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.

எமக்கு சுயாதீனமான ஒரு அரசாங்கம் கிடைத்தவுடன், 2011ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவினர் என கூறி யார் யாருக்கெல்லாம் கொடுப்பனவுகளை வழங்கினார்களோ அது குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுப்போம்.

அவர்கள் அனைவரையும் போர்க்குற்றவாளிகளாகவும், தேசத்துரோகிகளாகவுமே நாம் காண்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முழுமையான பொறுப்புகள் அவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கி போசித்தவர்களுக்கே உள்ளது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.