வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு

வடமாகாண ஆளுனரால் இடைநிறுத்தப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத்தேர்வுகள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றும், இன்றும் நடைபெற்றன.

நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து 454 சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமன நிகழ்வானது கடந்த 6 ஆம் திகதி வடமாகாண ஆளுனரால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த நியமனம் தொடர்பில் 1923 சுகாதார தொண்டர்களையும், நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத் தேர்வில் மீள தோற்றுமாறும் ஆளுனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதற்கமைவாக சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு வவுனியாவில் நடைபெற்றது.

இதில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது கல்வித் தகுதியினையும், தாம் கடந்த காலத்தில் சேவையாற்றியமையையும் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.