கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியாக வருவது, தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு நடந்துக்கொள்ள மாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை.
அவ்வாறு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும்.
கோத்தபாய ராஜபக்சவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோத்தபாய ராஜபக்ஸவை வழிநடத்த பார்க்கும். அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என அவர்” மேலும் கூறியுள்ளார்.






