இலங்கை அணியை புரட்டி எடுத்த பாபர் அசாம்… சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக கராச்சியில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியின் பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்கள் சேர்த்த போது, இமாம் உல் ஹக் 31 ஓட்டங்களிலும், பகர் ஜமான் 54 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பாபர் அசம் இலங்கை அணியின் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சொந்த நாட்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அவர், 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ஓட்டங்கள் குவித்தார்.

ஹரிஸ் சோஹைல் 48 பந்தில் 40 ஓட்டங்களும், இப்திகார் அகமது 20 பந்தில் 32 ஓட்டங்களும் அடிக்க பாகிஸ்தான் அணி இறுதியாக 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் குவித்தது.

அதன் பின் 306 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா மற்றும் சமர விக்ரமா களம் இறங்கினர்.

இருவரும் இணைந்து நிதானமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 3.6வது ஓவரில் சமர விக்ரமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் குணதிலகா (14), அவிஷ்கா பெர்னாண்டோ (0), திரிமானே (0), பெர்னாண்டோ (1) தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜெயசூர்யா, ‌ஷனகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய நிலையில் ஆட்டத்தின் 40.5வது ஓவரில் ஜெயசூர்யா 96 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் உஷ்மான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன் பின் ‌ஷனகா (68) ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து

238 ஓட்டங்கள் எடுத்து 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் உஷ்மான் 5 விக்கெட்களையும், கான் 2 விக்கெட்களையும், அமிர், வாசிம், ரியாஷ் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.