யாழில் சரமாரியாக வாள் வெட்டு: 3 வாரங்களுக்குப்பின் நேர்ந்த சோகம்; துயரத்தில் உறவுகள்!

யாழ். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி இரவு உயிரிழந்தார்.

எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது.

அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், இன்றுவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

“சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும் உரிமையாளர் உயிரிழந்தவுடன் தற்போது உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு தற்போது (இரவு 10.30 மணி) கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்” என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.