நவராத்திரியின் சிறப்பு

உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் நவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல வருடகாலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா எப்போது, முதலில் கொண்டாடப்பட்டது என, யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

புரட்டாசி மாதத்தை, எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழா எப்போது முதலில் கொண்டாடப்பட்டது என, கூற முடியாவிட்டாலும், இராமாயண காலத்திலேயே நவராத்திரி கொண்டாடப்பட்டுள்ளது.

நவராத்திரி பூஜை செய்து தான், சீதை இருக்கும் இடத்தை அறிந்ததாக, தேவி பாகவதம் கூறுகிறது.

அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள். நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும்.

பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்வார்கள்.

கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும்.

நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது. பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும் சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும் சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம்.

மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும்.

இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும். நவராத்திரி காலத்தில் விடிய விடிய விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும்.

விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும்.

விளக்கிற்கு மலர் சூடுவது மிகநல்லது.தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம். தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

நாயன்மார்களில் நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப் பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

விளக்கேற்ற எக்காலமும் உகந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் தாமரைத்தண்டுத்திரியால் விளக்கேற்ற முன்வினைப்பாவம் தீரும். எருக்கம் பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திரபாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும்,நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.

கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன்தொல்லை அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது. நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை ஜலதீபம் என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

திருவிளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப் பிரார்த்தனையானயால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி. சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

ஒரு வருடம் கெடாத தேங்காய் நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும்.

இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

அம்மன் விரும்பும் நவராத்திரி: நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும்.

நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும் மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான்.

தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.

விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் – சக்தியாலும், வறுமை-செல்வத்தினாலும், அறியாமை-ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள்.

நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள்.

எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றோம்.

இத் திருநாளில் (வித்தியாரம்பம் செய்தல் ) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரம்பித்தல் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகிஷாசுரன், சண்டமுண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக – அர்த்தநாரீரசுவராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான். அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளங்கப்படுகின்றது. (இச்சை ஸ்ரீ விருப்பம், ஞானம் ஸ்ரீஅறிவு, கிரியா ஸ்ரீ செய்தல், ஆக்கல்)

புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே சிற்றின்ப வாழ்கையைத் தவிர்த்து, உணவை அளவோடு நிறுத்தி, விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டைத் தொடக்க வேண்டும்.

விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாம் நாளாகிய மகாநவமி அன்று உபவாசம் (பட்டினியாய்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டு நாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்த்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.

நவராத்திரியில் கொலு வைப்பது வழக்கம். அமாவாசை அன்றே படிக்கட்டுக்கள் வைத்து பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதும், விஜயதசமியன்று ஒன்றிரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டுப் பின்னர் கலைக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம். தேவியரை வணங்குவதால் எதையும் பெறலாம். ராமர் கூட ராவணன் மீது போர் தொடுக்கும் முன் நவராத்திரி விரதமிருந்து சக்தியிடம் ஆசி பெற்றதாகக் கூறுவதுண்டு.

ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவார்கள். நறுமணமுள்ள சந்தனம், பூ (புஷ்பம்) இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்து அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் அவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச்செய்ய வேண்டும்.

குமாரி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்பட வேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

குமாரிகளுக்கு ஆடை, ஆணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞ்சள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில்நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயத பூஜை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட்பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.