யாழில் வைத்து ஞானசாரருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும். காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தை காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தது மாத்திரமன்றி, எமது பாரம்பரியமான இந்து ஆலயத்திற்கு அருகாமையில் சவாலுடன் நின்று எரித்த நிலமையை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எம்மைப் பொறுத்தமட்டில் காவி உடை புனிதமானது, காவி உடையை கழற்றி விட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும்.

எமது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் காவி உடை அணிவது புனிதமானது. ஒரு சில பௌத்த பிக்குகள் காவி உடை அணிந்து கொண்டு, தமிழ் இனத்தை மிக மோசமாக நடாத்த எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் அனைவரும் அநாதரவாக நிற்பார்கள் என சிங்கள பௌத்த பிக்குகள் எண்ணுகின்றார்கள் போல் உள்ளது.

அகிம்சை போராட்டம் என்பது தமிழ் மக்கள் இலங்கைக்கு சொல்லித்தந்த வரலாறு அல்ல. ஆயுதப் போராட்டத்தின் மூலம் எமது மக்கள் தென்னிலங்கையை வாய் திறக்காத வண்ணம் வைத்திருந்தார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்பு மக்களை எந்தவகையிலும் வழிநடத்தலாம் என தற்போது சிங்கள பௌத்த பிக்குகள் கருதுகின்றார்கள். ஆகவே, மக்கள் போராட்டம் நிச்சயமாக வெடிக்கும்.

எனவே, நீதிமன்றம் ஞானசார தேரருக்கு தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றினால், பிணையில் விடுவித்த நபர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அந்த நபருக்கு பிணை வைத்தவரை 15 நாட்கள் காவலில் வைக்கின்றார்கள்.

நீதிமன்றத்தை சாதாரண ஒரு குடிமகன் அவமதித்தால், அவரது பிரஜாவுரிமை மறுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே, நீதிமன்றம் மௌனமாக இருக்க கூடாதென்பது என்னுடைய கோரிக்கை. ஆகவே, ஞானசார தேரர் தனது காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்திற்கு தயாராகினால், நாங்களும், சண்டித்தனத்திற்கான பதிலைச் சொல்ல தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.