கேரளாவில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் ஒரே மாதிரி அடுத்தடுத்து உயிரிழப்பு -14 வருடங்களின் பின் சிக்கிய மருமகள்!

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்நத அறுவர் சொற்ப கால இடைவெளிக்குள் ஒரே மாதிரி அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்கள் உயிரிழக்க அந்த குடும்பத்தின் மருமகளே காரணம் என்பது 14 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

2002 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். இந்தத் தொடர்ச்சியாக கொலை சம்பவம் கேரளாவையே உலுக்கியது.

முதலில் அன்னம்மா என்ற பெண் 2002இல் உயிரிழந்தார். 57 வயதான இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின்படி உணவு அருந்திய உடனே இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அடுத்ததாக அன்னம்மாவின் கணவர் டாம் தாமஸ் உயிரிழந்தார். இவர் ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி. இவர் 2008ம் ஆண்டு உயிரிழந்தார். இந்த உயிரிழப்பும் உணவு அருந்திய உடன் நிகழ்ந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்துவிட்டார். அடுத்ததாக அன்னம்மா – டாம் தாமஸ் தம்பதியின் மகன் ராய் தாமஸ். இவர் 2011ம் ஆண்டு இறந்தார்.

உணவு அருந்திவிட்டு கைகழுவ சென்ற போது மயங்கி விழுந்தார். பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால், மருத்துவமனை செல்லும் முன்பு அவர் இறந்துவிட்டார். ராய் உடலை பிரதேச பரிசோதனை செய்ததில் அவரது உடலில் பொட்டாசியம் சையனைடு இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், ராய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. போலீஸ் விசாரணையும் அதனை தாண்டி செல்லவில்லை.

அடுத்ததாக, 2014ம் ஆண்டு அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவ் தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். இவரது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த மரணம் நிகழ்ந்தது. இவர் ராய் மரணம் குறித்து தொடர்ச்சியாக சந்தேகத்தை எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டில் அல்ஃபின் என்ற ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது. இந்த மரணமும், உணவு அருந்திய உடன் நிகழ்ந்தது.

இதன் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு குழந்தை அல்ஃபினின் தாய் சிலி(44) 2016ம் ஆண்டு அதேபோல் உயிரிழந்தார். மொத்தம் 6 கொலைகள் அடுத்தடுத்து ஒரே மாதிரியான சூழலில் நிகழ்ந்தது. இதனிடையே, சிலி உயிரிழந்த ஒரு வருடத்திற்கு பின்னர் அவரது கணவர் ஷாஜு, 2011இல் கொலை செய்யப்பட்ட ராயின் மனைவி ஜால்லியை திருமணம் செய்து கொண்டார்.

இந்தக் கொலை வழக்கை அமெரிக்காவில் வசித்துவரும் அன்னம்மாவின் இரண்டாவது மகன் ரோஜி வெளியே கொண்டு வந்தார். தங்களது குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் ஜால்லி பெயரில் போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கேள்விப் பட்டதை அடுத்து அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.

அதனால், தொடர்ச்சியான மரணங்கள் குறித்து விசாரிக்குமாறு போலீசாரை விரைவு படுத்தினார். இறந்த அனைவரின் உடல்களும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல், விசாரணையில் அனைத்து மரணங்களின் சூழலில் அந்த இடத்தில் ஜால்லி இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைத்த போது அதற்கு ஜால்லி ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஜால்லியையும் அவருக்கு உதவியதாக இருவரையும் பொலிசார் கைது செய்தனர். அந்த இருவர்தான் ஜால்லிக்கு கொலை செய்வதற்கு சயனைட் கொடுத்ததாக கூறப்படுகிறது. சொத்துக்காக சொந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.