கருவறையில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்த விசுவமடு கோபிதன் சாதனை..! எதிர்கால இலட்சியம் என்ன தெரியுமா..?

தாயின் கருவறையில் இருக்கும்போது இராணுவத்தின் செல் வீச்சில் தந்தையை இழந்து அவரின் முககூட தெரியாது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் கோபிநாத் கோபிதன் புலமைப்பரிசில் 183 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் ஒரு மருத்துவராக வந்து போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது வாழ்வின் இலட்சியம் என கோபிதன் தெரிவித்திருக்கிறார்.

2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மேற்கு பகுதியில் வசித்து வருகின்ற கோபிதன், கடந்த 2009ஆம் ஆண்டு தாயின் கருவறையில் இருந்த வேளையிலேயே மாத்தளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிறந்துமுதல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த சிறுவன் விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி 183 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கோபிநாத் சாரதா கணவனை பறிகொடுத்த நிலையில் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் கூலித்தொழில் செய்து தனது மகனை கற்பித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையினை இட்டு மனமகிழ்வு அடைவதோடு தனது மகனின் இலட்சியம் நிறைவேற தான் பாடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.