திருட சென்ற இடத்தில் சிசிடிவி கமெராவை பார்த்து திருடர்கள் செய்த செயல்!

இந்தியாவின் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருட வந்த இடத்தில் சிசிடிவியைப் பார்த்த திருடர்கள், குப்பைக் கூடையை தலையில் கவிழ்த்துக் கொண்டு 2,500 ரூபாயை திருடிச் சென்ற நகைச்சுவை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிசிடிவி இருப்பதை பார்த்த பிறகும் கூட அது சிசிடிவி தானா என்பதை, தங்களது முகம் பதிவாகும் வரை குறுகுறுவென கவனிக்கும் இவர்கள் தான் குப்பைக் கூடைத் திருடர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள பெண்கள் தொழில் பயிற்சி மையத்தில் திருட முயன்ற இவர்கள் தான் தற்போது குப்பைக் கூடையும், கையுமாக சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி இரவு சுமார் 12 மணி அளவில் பயிற்சி மையத்தின் தாழ்ப்பாளை உடைத்த அந்த திருடர்கள், சிசிடிவி கேமராவைப் பார்த்ததும் திகைத்துப் போயினர். இதை அடுத்து இருவரும் கூடிப் பேசி, தலையில் குப்பைக் கூடையை கவிழ்த்துவதென ஒரு முடிவுக்கு வந்தனர்.

உள்ளே நுழைந்த பிறகு 2,500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு குப்பைக் கூட திருடர்கள் அங்கிருந்து சென்றனர். பணத்தை பறிகொடுத்த, தொழில் பயிற்சி மையத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காணொளியை வைத்து திருடர்களை பிடிக்க வலை வீசி வருகின்றனர்.