கோத்தாவினால் கடற்படைக்கு வழங்கப்பட்ட 8 கிலோ தங்க விவகாரம்- வெளிவரும் உண்மைகள்

யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இவை கடற்படைக்கு வழங்கட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 8 கிலோ தங்கத்தை பயன்படுத்தி ஒரு புத்தர் சிலையும், இதற்கு மேலதிகமாக இலங்கை வங்கி வழங்கியுள்ளதாக கூறப்படும் மூன்றரை கிலோ தங்கத்தின் ஊடாக தங்க போதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இத்தகவலை நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவின் விசாரணை அறை இலக்கம் 8 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ கோட்டை நீதிவானுக்கு இன்று அறிவித்துள்ளார்.

இதனைவிட பித்தளையால் செய்யப்பட்ட இரண்டரை அடி உயரமான சிலை, ஒன்றரை அடி உயரமான சிலை, ஒரு அடி உயரமான தங்க முலாம் பூசப்பட்ட சிலை, தங்க நூல், தங்க தகட்டிலான அதிகார பத்திரம், 240 கிராம் தங்க பாதம் ஆகியனவும் இதன்போது செய்யப்பட்டுள்ளமை கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்யப்பட்ட சிலைகள் உள்ளிட்டவற்றில் அனுராதபுரம் ‘ சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபிக்குள் தங்க புத்தர் சிலை, தங்க போதி ஆகியவற்றை தவிர ஏனைய எதுவும் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்ர்.

குறித்த தங்கத்தை கடற்படைக்கு வழங்கியமை தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர ,மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன்றில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ இந்த விடயங்களை மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like