வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற யுவதிக்கு சொந்த ஊரில் ஏற்பட்ட பெரும் சோகம்

கலேவெல அகலேவேல பகுதியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற யுவதியொருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து, ஊரைவிட்டே ஒதுக்கப்பட்டுள்ளனர் ஆறு சகோதரிகள்.

இதில் பாடசாலை செல்லும் மூன்று பெண்பிள்ளைகளை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.

அந்த ஆறு சகோதரிகளும் கிராமத்து பொதுக்கிணற்றில் நீர் அள்ளவோ, கடையில் பொருள் வாங்கவோ முடியாத நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் ஒரு பெண் பிள்ளை தற்கொலைக்கு முயன்ற நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆறு பெண் பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் தந்தையார் கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து, குடும்பத்தின் இரண்டாவது மகள் ஷாலனி பிரேமதிலக (24), சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு பணிப்பெண்ணாக சென்றார்.

எனினும், அவரது உடலில் ஏற்பட்ட தோல் நோய் காரணமாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார்.

அவரது தீவிர தோல்நோய்க்கு நீண்ட சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, தாயார் வெளிநாட்டு பணிப்பெண்ணாக சென்றார்.

ஆறு பெண் பிள்ளைகளில் மூத்தவர் திருமணம் செய்திருந்தார். அவருக்கு சிறிய மகள் உள்ளார்.

இளைய சகோதரிகள் தினதி மதுஷிகா (14), திலினி கௌல்யா (13), கிட்மி ஹிமயா (8) ஆகியோர் கலேவெல நிரங்கமுவ வித்யாலயாவில் படித்து வந்தனர்.

ஷாலனிக்கு ஏற்பட்ட தோல் நோய் குணப்படுத்த முடியாமல் இருந்ததையடுத்து, அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக உள்ளூரில் வதந்தி பரவியது.

இதையடுத்து, மூன்று சிறுமிகளும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியில் செல்லவோ, ஒரு பொருளை வாங்கவோ முடியாமல் தாம் திண்டாடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூகத்தின் வன்முறை காரணமாக அந்த குடும்பம் பெரும் மன அழுத்தத்தில் வாழ்கிறது. பொதுக்கிணற்றில் நீர் அள்ளக்கூட முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.வி வதந்தி பரவியதையடுத்து மூத்த மகள் சித்ரா குமாரியின் (27) கணவரும் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்.

தோல் நோய்க்காக ஷாலனி, தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூக நெருக்கடி காரணமாக ஒரு மகள் தற்கொலைக்கு முயன்று, தற்போது வைத்திய சிகிச்சையுடன் உயிர்வாழ்ந்து வருகிறார்.

தம்புள்ள வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் சுதர்ஷனி, அந்த தோல் நோய் நீண்டகால சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியுமென்றும், ஆனால் அது தொற்றுநோய் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் வதந்திகள் காரணமாக, நோயாளிகளின் தனியுரிமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பொதுவான தோல் நோய், தொற்றுநோய் அல்லவென ஒரு உறுதிப்படுத்தல் கடிதத்தை சிங்கள மொழியில் அவர் வழங்கியுள்ளார்.

எனினும், அந்த கிராமம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவர்கள் அனைவரும் சிறிய வீடொன்றில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.