யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் அசமந்தத்தினால் சட்டத்தரணியொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதற்கு ஆதாரமாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் சட்டாத்தரணியின் பிள்ளைகள் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

அச்சுவேலி தும்பளையை சேர்ந்த மூத்த சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (69) என்பவர் கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில் அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 நாளின் பின்னர் அவரது உடல்நலம் தேறியயுள்ளது.

இந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் அவரது வயிற்று பகுதி வீங்கியுள்ளது.

அது தொடர்பில் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, குழாய் பொருத்தியிருப்பதால் அப்படிதான் இருக்கும் என பொறுப்பற்றவிதமாக அவர்கள் பதில் அளித்துள்ளதாகவும் கிள்ளைகள் கூறுகின்றனர்.

எனினும், வீக்கம் அதிகரிக்க, மீண்டும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த விடயம் சத்திர சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனினும், சத்திர சிகிச்சையினால் வீக்கம் ஏற்படவில்லை, என தெரிவித்த மருத்து அது சாதாரண நிலைமை என பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து தந்தையின் உடல்நிலை மோசமானதை யடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழாய் தவறான முறையில் பொருத்தப்பட்டதும், குழாய் மூலம் செலுத்தப்பட்ட உணவு இரப்பைக்கு வெளியில் சென்று, தொற்று ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர் மீண்டும் பிறிதொரு வைத்தியரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் கடந்த 6ம் திகதி சட்டத்தரணி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் நம்பிக்கையில்லையென குறிப்பிட்டு, யாழ் நீதிவானின் அனுமதியை பெற்று, உயிரிழந்தவரின் உடலை கொழும்பிற்கு கொண்டு சென்று உறவினர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

பரிசோதனை அறிக்கையில், குழாய் தவறுதலாக பொருத்தப்பட்டு, குழாய் ஊடாக சென்ற உணவு இரப்பைக்கு வெளியில் பரவி, தொற்று ஏற்பட்டு, உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்து உடல்நலம் மோசமானதாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சரியான முறையில் குழாய் பொருத்தப்படாமல், உணவு நஞ்சானதே மரணத்திற்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் சட்டத்தரணியின் இறுதிக்கிரியைகள் அச்சுவேலியில் இடம்பெறவுள்ள நிலையில், யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like