நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை – இடையூறு விளைவித்த தென்னிலங்கை நபர்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று இடம்பெற்றபோது, அதனை பெரும்பான்மையினர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கு, ஆலய நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியபோதும் , பொலிஸார் அதனை கண்டுகொள்ளவில்லை.

இதனையடுத்து புகைப்படம் எடுத்தவருடன், அங்கு இருந்த மக்கள் முரண்பட்டதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் அங்கு சென்ற பொலிஸார், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அவருக்கு சார்பாக குரல் கொடுத்ததாகவும் தங்களை விலகிச் செல்லுமாறு வலியுறுத்தியதாகவும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு– பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறித் தங்கியிருந்த பௌத்த பிக்கு, கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவருடைய உடல் நீதிமன்ற உத்தரவினை மீறி ஆலய கேணிப்பகுதியில் தகனம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த துர்சம்பவத்திற்காக, விசேட சாந்தி பூசை நிகழ்வொன்றை நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் இன்று ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.