யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டே நேற்று இந்த கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்கு பின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும் என்றும் புலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ். மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திப்பதற்கான வழியாக இது அமைகின்றது எனவும் வடக்கு ஆளுநர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விமான போக்குவரத்தின் போது தமிழ் நாட்டிற்கான 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் இதனை வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வடக்கு ஆளுநர் கூறியுள்ளார்.