யாழ்.விமான நிலையத்திற்கான வீதியை விட மறுத்தது இராணுவம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், காணிகளை பறிகொடுத்த மக்கள் நாளை அந்த பகுதியில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினமே பொதுமக்கள் அந்த பகுதியை பார்வையிட இராணுவம் ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இன்று விமான நிலையத்திற்கு சென்ற மக்கள், தமது காணிகளிலேயே விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன்- மயிலிட்டி சந்தி வரையான வீதியில் 400 மீற்றர் வீதியை இராணுவம் விடுவிக்க மறுத்து விட்டது.

இராணுவத்தை சமாதானப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி இறுதிவரை வெற்றியளிக்கவில்லை.

இதையடுத்து, அந்த வீதிக்கு பதிலாக, படையினர் அண்மையில் விடுவித்த தனியார் காணிக்குள்ளால் புதிய வீதியொன்றை இன்று துரிதகதியில் அமைத்து வருகிறார்கள். இதற்காக சுமார் 25 ஏக்கர் காணி மீள் அபகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் அமைக்கவோ, வீதி அமைக்கவோ தமது காணிகளை சுவீகரிப்பதாகவோ, அதற்கு நட்டஈடு தருவதாகவோ எந்த தகவலும் தராமல் காணிகளை அபகரித்துள்ளதாக, அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மற்றும், விமான நிலைய பாதைக்காக அபகரிக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நாளை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை விமான நிலையம் திறப்பு நிகழ்வு நடக்கும்போது, இந்த எதிர்ப்பு போராட்டம் நடக்கும்.