நல்லூர் கோயில் போன்று கீரிமலை நகுலேஸ்வர ஆலயமும் மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்த ஆலயமும் புனரமைப்புச் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக வருகை தந்த பிரதமர், பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது செட்டிபுலம் சங்கானை பிரமந்தை வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதோடு நேரடியாக பன்னாலை கீரிமலை வீதி புனரமைப்பு வேலைகளை பார்வையிடுவதற்காக கீரிமலை நகுலேஸ்வர ஆலய முன்றலுக்கு சென்றார்.
இதன்போது கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுருவை சந்தித்துக் கலந்துரையாடிய பிரதமர் நகுலேஸ்வர ஆலயத்தை புனரமைப்புச் செய்வது குறித்தும் பேசியுள்ளார்.
நல்லூர் கோயில் போன்று இந்த ஆலயமும் மிக முக்கியமானது. விரைவில் புனரமைப்புச் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த நிகழ்வுகளில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






