24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் வைத்தியர்! அம்பலத்திற்கு வரும் உண்மைகள்

மட்டக்களப்பு வைத்தயசாலைக்கு முறைகேடான முறையில் நியமனம் பெற்ற வைத்தியர் சுகு நியமனம் 24 மணித்தியாலங்களுக்குள் மீளப்பெறப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்கவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் வைத்தியர் சுகுணனின் நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி காலை சுகுணனுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்ட நிலையில் 16ஆம் திகதி மதியம் அவரின் நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புள்ள சுகுவிற்கு எவ்வாறு இந்த நியமனம் வழங்கப்பட்டது என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பியதோடு கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் குறித்த மருத்துவ நிபுணர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டு விசாரனைகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

தகுதியும் பொறுப்பும் உணர்வும் உள்ள ஒரு பணியாளரை நியமிக்காது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு தகுதியற்று இருக்கும் ஒருவரை மக்கள் சேவைக்கு நியமிப்பது ஆயிரம் பாவங்களை செய்வதற்கு ஒப்பானது எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் கருணாவிற்கு மிக நெருக்கமான இவரின் நியமனம் சுகாதார துறைக்கே இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இவரின் நியமனத்தை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக வடக்கில் உள்ள முக்கிய புள்ளி ஒருவர் செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் வைத்தியர் சுகுவை எதன் அடிப்படையில் நியமித்தார்கள் எனவும் புத்திஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை சுகாதார பணிப்பாளர் ஊடாக பைசல் காசிம் வைத்தியரின் நியமனத்தை விரைவு படுத்தியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது,

இந்த நிலையில் கருணாவிற்கு நெருக்கமான ஒருவர் முஸ்லிம் அரசியல்வாதிகளால் நியமனம் பெற்றுள்ளமை பல சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

தமிழர் பிரதேசங்களில் இருந்து முஸ்லிம் பகுதிகளுக்கு அனைத்து வழங்கல்களும் பிடுங்கிக் கொடுக்கப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுபோன்றவர்களின் நியமனம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டுகொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டுகொள்ளாமல் இருக்கின்றமையினால் கிழக்கிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேவை தானா என்கின்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஊழல் செய்து மக்களின் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் விளையாடிய பெரும் ஊழல்வாதியின் நியமனம் நிறுத்தப்பட்டதனால் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தப்பிவிட்டதாக சத்திரசிகிச்சைப்பிரிவின் முக்கிய வைத்தியர் உட்பட பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.