யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அவரச அவசரமாக திறந்துவைத்திருப்பதற்கான காரணம் இதுதான்!

ஸ்ரீலங்காவில் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அவரச அவசரமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் திறந்துவைத்திருப்பதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக தமிழ் மக்களின் வாக்குகளைத் திரட்டும் நோக்கில் கடந்த ஒருவாரமாக வடக்கில் முகாமிட்டுள்ள நாமல் ராஜபக்ச, கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

“மத்தல விமான நிலையம் இந்த நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகும். எனினும் அதற்கு நாம் ஹம்பாந்தோட்டை என பெயர் சூட்டவில்லை. அதனை மத்தல விமான நிலையம் என்றே பெயரிட்டோம். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தை மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பெயரிட்டார். அதனை அவ்வாறு உருவாக்குவதற்கான யோசனையை அவரே முதலில் முன்வைத்தார். மஹிந்த ராஜபக்சவின் முன்மொழிவின் பிரகாரம் பலாலி விமான நிலையத்தை மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக உருவாக்கியுள்ளமை தொடர்பில் நாம் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த அரசாங்கத்தின் இறுதி மாதத்தில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் இறுதி மாதத்தில் இந்த விமான நிலையத்தை திறந்துவைத்தமை தொடர்பில் மகிழ்ச்சி அடைகின்றோம். பலாலியில் இருக்கும் விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என ஏன் பெயர் சூட்டினர் என்பதில் எமக்கு பிரச்சினை உள்ளது. இது தனியே தேர்தலை இலக்காக கொண்ட செயற்பாடு. தேர்தல் நெருங்கும் தறுவாயில் மத்தல சிறந்தது அல்ல என கூறியவர்கள் தற்போது பலாலி சிறந்தது என கூறுகின்றனர். இதன்மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சதிதிட்டம் மறைந்துள்ளது. விமான நிலையத்தில் இன்று வரை கட்டடங்களை கூட அமைக்கவில்லை. அவ்வாறு இருக்க எவ்வாறு சுங்கம், குடிவரவு விடயங்களை எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பதில் பிரச்சினை இருக்கின்றது.

இந்த அரசாங்கத்தினால் எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. நடைமுறையில் பலாலி விமான நிலையத்தில் விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறக்கலை செய்ய முடியும். எனினும் சர்வதேச விமான நிலையத்திற்கு இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் கூட அங்கு இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவெனும் அவ்வாறான அபிவிருத்தியை செய்தார்கள் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.