யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த அதே நேரத்தில் செப்ரெம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானியின் மூலம் தேர்தல் காலத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களையும் வெளியிட்டிருந்தார்.

2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து, முன்னாள் துணைவேந்தர் அனுப்பிய கடிதத்துக்கமைவாக நியமன நடைமுறைகளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் புலன் விசாரணைகளுக்கான மேலதிக ஆணையாளரினால் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த அறிவுறுத்தல் உயர்கல்வி அமைச்சின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமிக்கு அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி கடந்த 7 திகதி ஆகும். விண்ணப்ப முடிவுத்திகதியன்று துணைவேந்தர் பதவிக்காக புலம்பெயர் பேராசிரியர்கள் இருவர் உள்பட 9 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பம் கோரப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும், குறிப்பிட்ட காலப்பகுதியினுள் நாடுமுழுவதும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு இடம்பெற்ற காரணத்தினாலும் துணைவேந்தர் தெரிவு நடைபெறுமா என்ற சந்தேகம் பல்கலைக்கழக வட்டாரங்களினுள் நிலவி வந்த நிலையில் தற்போதைய அறிவித்தல் மேலும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like