யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்; போலித் தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம் – அதிகாரிகள் முன் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்தி வைக்கப்பட்ட போதும் உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கான பயணிகள் விமான சேவையை ஆரம்பிப்பதற்கான திகதி மற்றும் சேவைக் கட்டணம் என்பவை தொடர்பில் நவடிக்கை உத்தியோகபூர்வ எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதனால் சமூக ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்குமாறான தகவல்களை நம்பி மோசடிக்காரர்களிடம் பணத்தை வழங்கி ஏமாறவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபா எனவும் யாழ்ப்பாணம் – கொழும்பு விமானக் கட்டணம் 2 ஆயிரத்து 500 ரூபா எனவும் சமூக வலைத் தளங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவிடப்படுகின்றன.

அவ்வாறு விமான சேவைக் கட்டணங்கள் தீர்மானிக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் விமான நிறுவன முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது;

யாழ்ப்பாணம் சர்வதேச விமானஙநிலையம் (Jaffna International Airport – JIA) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. உள்கட்டுமாணங்கள் உடனடியான, பிராந்திய விமான சேவையினை நடத்துவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு சேவைகள் தொடங்கிவிட்டது. ஆனாலும் விமான நிலைய செயற்பாடு தொடர்பான தேவைகள் பல இன்னமும் முழுமையாக இயங்க தொடங்கவில்லை.

உபகரணங்கள், இயந்திரங்கள் பல இன்னமும் கொண்டுவரப்படவில்லை. இன்னமும் சிறிதுகாலம் தேவைப்படும் இந்த தேவைகளை நிறைவு செய்வதற்கு.

விமான சேவைகள் தொடங்குவது குறித்த தீர்மானங்கள் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை, பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் அலையன்ஸ் எயர் விமான சேவை, இந்த மாத இறுதியிலேயோ அல்லது நவம்பர் மாத முதல் வாரத்திலோ தினசரி பயணிகள் சேவையினை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பயணசீட்டு விலை பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இன்றுவரை வெளிவரவில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் பல பிழையான தகவல்கள் உலாவுகின்றது.

முக்கியமாக பயணசீட்டு முன்பதிவுகள் தொடங்கிவிட்டதாகவும், குறைந்த விலையில் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தில் வேகமாக பகிரப்படுகிறது.

இது உண்மைக்கு புறம்பான தகவல். நீங்கள் ஏமாற்றப்படக்கூடும். இவ்வாறு இணையம் மூலமாகவோ, நேரடியாகவோ முன்பதிவு கட்டணம் என்று ஒருவரிடம் ரூபா 500/- படி 500 பேரிடம் அவர்கள் பெற்றுக்கொண்டால் கூட, ரூபா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூப அவர்களுக்கு கிடைக்கும். பின்னர் ஏதாவது காரணம் சொல்லி பணத்தை தராமல் விடுவார்கள்.

உங்களுக்கு 500 ரூபாதான் நட்டம். ஆனால் அவர்கள் பல லட்சங்களை சுருட்டிவிடுவார்கள். ஆகவே அவதானமாக இருங்கள். எதிர்வரும் தினங்களில் வெளிவரக்கூடிய உத்தியோகபூர்வ அறிவித்தல்களை பார்த்து அதன்படி நடவுங்கள் – என்றுள்ளது.