ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்றவர்களைத்தான் தனது அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இந்த நாட்டு மக்கள்தான் வசதியாக வாழ்வார்களே ஒழிய, அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் அல்ல.
அமைச்சர்கள்- பிரதியமைச்சர்களுக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் நாம் மட்டுப்படுத்துவோம். எமது ஆட்சியில் எமது அமைச்சர்கள் அனைவரும் வீதியில் இறங்கி, மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்.
இதனைத்தான் நான் அவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அமைச்சரவையை நியமிக்கும்போதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத புதியவர்களைத்தான் நியமிப்பேன். இதனால், இலங்கையிலிருந்து முற்றாக வறுமையை இல்லாதொழிப்பேன்.
மக்களின் வரிப்பணத்தால் சுகபோக வாழ்க்கை வாழும் ஜனாதிபதியாக இல்லாது முழுநேர மக்கள் சேவகனாகவே நான் இருப்பேன் என்பதை இவ்வேளையில் நான் உறுதியுடன் மக்களுக்குக் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.






