கோத்தபாய அணியினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய தயாசிறியின் திடீர் அறிவிப்பு

உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ள போதும், பொதுஜன பெரமுனவின் தேர்தல் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், “பொதுஜன பெரமுன பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்தித்த துன்புறுத்தல்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் 5 ஆயிரம் கூட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் வீடு வீடாகச் சென்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பரப்புரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், நாங்கள் பொதுஜன பெரமுனவின் மேடையில் அவர்களுடன் இணைந்து ஏறுவதற்கு தயாரில்லை.

நாங்கள் அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.