ஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த கோத்தபாய

இறுதிப் போரை வழிநடத்தியது தாம் இல்லை என்று கடந்தவாரம் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச, போரை முடிவுக்கு கொண்டுவர படையினரை வழிநடத்தியது தாமே என்று இன்றைய தினம் கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக தாம் தெரிவுசெய்யப்பட்டால் கடந்த ஆட்சியில் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மீண்டும் அமுல்படுத்துவதாக உறுதியளித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முன்பாக பாதுகாப்பையும் தாம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நடத்திய முதலாவது பகிரங்க ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 14ஆம் திகதி கொழும்பு ஷெங்கரிலா விடுதியில் நடைபெற்றிருந்தது.

இதன்போது இறுதிப்போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோ அல்லது அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தாமோ போரை வழிநடத்தவில்லை என்றும், மாறாக முன்னாள் இராணுவத் தளபதியே போரை வழிநடத்தியவர் என்றும் கூறி அந்த கேள்வியிலிருந்து நழுவிச்சென்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்து இன்றுடன் ஒருவாரம் பூர்த்தியாகின்ற நிலையில், அம்பாந்தோட்டை – பெலியத்த பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது, போரை தாமே வழிநடத்தியதாக தெரிவித்துள்ளார்.