அதிகாரத்தை இழப்பதற்கு முன் ஒருவரையேனும் துாக்கிலிடுவேன்..! ஜனாதிபதி மைத்திரி

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குவது தொடா்பாக நீதிமன்ற ம் சாதகமான தீா்ப்பை வழங்கினால் பதவிவிலக முன்னா் ஒருவருக்கேனும் தான் மரண தண்டணை வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் கூறியுள்ளார்.

போதைப்பொருளிலிருந்து நாட்டின் இளைஞர் தலைமுறையை மீட்பதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு

தீர்மானித்தபோதும் அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்குத் தீர்ப்புக்கு தலை சாய்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக அந்த வழக்குத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கேனும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானவன் தான் தான் என்ற போதும், நாட்டின் இளைஞர்கள் ஊடக சுதந்திரத்தை அதிகளவு அனுபவித்து வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இளைஞர்களை வலுவூட்டுவதற்காகவும் அவர்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனது ஆட்சிக்காலத்தில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் அரசியலுக்கு வருவதாயின் அவர்கள் கல்விப் பின்புலத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும் , முன்னுதாரணமான ஆளுமைகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கற்றவர்கள் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவடையும் என்பதுடன், அந்நாடு அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் எனவும், அவ்வாறான சூழ்நிலையில் அரச நிர்வாகமும் நல்லாட்சியாக காணப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.