கட்சியை பாதுகாக்க சந்திரிக்காவுடன் கைகோர்க்கும் வெல்கம மற்றும் அர்ஜுன ரணதுங்க!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ள அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள, அக் கட்சியின் உப தலைவரான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது சம்பந்தமாக அவர்கள் இருவரும் சந்திரிக்காவுக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு சென்றிருந்த சந்திரிக்கா கடந்த சனிக்கிழமை நாடு திரும்ப இருந்த நிலையில், அவர் தனது வருகையை மேலும் சில நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதனிடையே தான் எப்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அன்னப் பறவை சின்னத்தின் கீழ் அரசியலில் ஈடுபட போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பும் போராட்டத்தில் முன்னோக்கிச் செல்ல உள்ளதாகவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் அண்மையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த அவர், பொதுஜன பெரமுனவில் தன்னை இணையுமாறு வலியுறுத்தி வருகின்றபோதும், தான் தீர்மானத்தை மாற்றக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதுள்ள நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக அழிந்து போகவிடாமல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உடன் இணைந்து , கட்சியை கட்டியெழுப்ப தலையீடுகளை மேற்கொள்வேன் எனவும் குமார வெல்கம கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.