ஈழமணித் திருநாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லைக் கந்தனின் வடக்கு வீதியில் துர்க்கா மணி மண்டபத்திற்கு நேரெதிராக கிழக்கு நோக்கிச் செல்லும் வீதியே இது ஆகும்.
குறித்த வீதியானது யாழ் மாநகர சபை அதிகாரிகளின் அலட்சியப் போக்குகளினால் காலம், காலமாக மழை காலங்களில் இப்படிக் காட்சி தருகின்றது.
இது தவிரவும், தினமும் ஏறத்தாழ 33 குடும்பங்கள் இந்த வீதியில் செல்லும் போது சேற்று நீரில் நனைந்து பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு, சிறிய மழைக்கு கூட, இவ்வீதியில் நீர் தேங்கி நிற்பதனால் இதனூடகப் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது குறித்து யாழ் மாநகர சபையில் முறையிடப்பட்டு, குறித்த வீதியை விரைவில் அமைத்து தருவதாக இப்பிரதேசத்தில் உள்ள பெரியவர்களிடம் உறுதி மொழி வழங்கப்பட்ட போதிலும்,இதுவரை புனரமைக்கப்படாத நிலையிலையே உள்ளது.

வீதியின் கிழக்குப் புறத்தில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு தினமும் வந்து போகும் வாகனங்களும் குறித்த வீதியையே பயன்படுத்துகின்றனர்.
இவ் வீதியின் அவசியமான புனரமைப்பு பணிகள் தொடர்பாக உரிய இடங்களில் முறையிடப்பட்டும், இதுவரை காலமும் புனரமைப்பு செய்யப்படாமை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே , இனியும் காலம் தாழ்த்தாமல், உரிய முறையில் இவ்வீதியை செப்பனிட்டு பொதுமக்களின் பாவனைக்கு ஏற்றவாறு வழங்க வேண்டியது யாழ். மாநகர சபையின் பொறுப்பு என்பதை உணர்ந்து அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






