78 அடி ஆழத்தில் குழந்தை இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 87 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன்.
இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
அவரை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குழந்தை பள்ளத்தில் சிக்கி 36 மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. இதனால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
3ஆவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காலை முதல் குழந்தை இருக்கும் துளைக்கு பக்கவாட்டில் ரிக் இயந்திரம் பள்ளம் தோண்டும் பணிகளை செய்து வருகிறது. எனினும் அதில் 40 அடியில் பாறை இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிநவீன கேமரா மூலம் குழந்தையின் இருப்பிடத்தை மீட்பு க் குழுவினர் கண்டறிந்தனர். அதில் குழந்தை 78 அடி ஆழத்தில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அக்குழந்தை 87 அடி ஆழத்தில் இருக்கிறது.
இதனால் 90 அடி வரை சுரங்கம் தோண்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ் சிவராஜு கூறுகையில் பாறைகள் இல்லாமல் இருந்திருந்தால் குழந்தை சுஜித்தை 4 மணி நேரத்தில் மீட்டிருக்கலாம்.
மீட்கும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 40 அடி வரை பாறைகள் உள்ளன. 40 அடிக்கு பிறகு வேகமாக ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணி நடைபெறும். பக்கவாட்டு பகுதியில் 24 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது என்றார்