100 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை காப்பாற்றுவதில் சிக்கல் – போராடும் மீட்பு பணியாளர்கள்

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயதான குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

70 மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையில் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் கற்பாறைகள் நிறைந்துள்ளமையினால் துரிதமாக மீட்பு பணியை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட போதும் கடினமாக பாறைதான் இருப்பதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு 38 அடி ஆழம் தோண்டியதாக தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு இரண்டாவது ரிக் இயந்திரம் வந்ததிலிருந்து ஆறு மணி நேரம் துளை போடும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. தற்போது 40 அடி ஆழத்தை கடந்திருந்தாலும்கூட தொடர்ந்து அந்த பகுதியில் கடினமான பாறைதான் இருக்கிறது.

தற்போது பாறையை தகர்க்க முடியாமல் ஊழியர்கள் துளையிடும் பகுதியில் தண்ணீரை ஊற்றி வரும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வகையான ட்ரில்லிங் டூல்களை அங்கே வைத்திருக்கிறார்கள். அவைகளை கொண்டு மாற்றி மாற்றி அந்தப் பாறையை ஓரளவு தகர்த்து அங்கிருந்து துகள்களாக வெளியே எடுத்து வர முயற்சி செய்துவருகிறார்கள்.

உள்ளே செல்வதற்கும் ஒவ்வொரு அடியும் தோண்டுவதற்கும் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அடி வரை பள்ளம் தோண்டி இருக்கிறது.

அதேபோல் இந்த இயந்திரம் அதிக திறன் கொண்டது என்றாலும் பாறை தன்மை மிகவும் கடினமாக இருப்பதுதான் இந்த இயந்திரம் அவ்வளவு எளிதாக துளையைப் போட முடியவில்லை. ஆனால் முயற்சி கைவிடப்படாமல் தொடர்ந்து மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.