இறுதி நேரத்தில் மகிந்த அணியை தெறிக்க விட்ட டக்ளஸ்

சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள், அமைப்புக்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

இந்த உடன்படிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியும் கையெழுத்திட்டிருந்தது.

இரண்டு நாட்களின் முன்னதாக, ஈ.பி.டி.பி இந்த கூட்டணியில் கையெழுத்திடாது என கொழும்பு அரசியலரங்கில் திடீரென ஒரு தகவல் பரவியிருந்தது.

பெரமுன தரப்பிற்குள்ளும் இது சீரியஸான விவகாரமாக விவாதிக்கப்பட்டது. ஈ.பி.டி.பி ஏன் திடீரென இந்த முடிவையெடுத்தது என பெரமுனவின் கூட்டாளிகளும் பரபரப்பாகி, ஈ.பி.டி.பியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

பின்னர், நேற்று ஈ.பி.டி.பியும் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது.

முன்னதாக ஏன் அந்த தகவல் பரவியது, கையெழுத்திடுவதற்கு முன்னர் என்ன சம்பவங்கள் நடந்தது என்பதை அறிய, பெரமுனவின் முக்கிய புள்ளிகள் கூறியதாவது.

நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்ட இந்த இந்த கூட்டணி உடன்படிக்கையில் ஈ.பி.டி.பி கையெழுத்திடாது என்ற இறுதிநேர நிலைமை இருந்ததை அந்த பிரமுகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த உடன்படிக்கை சரத்துக்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் இரண்டை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதாலேயே ஈ.பி.டி.பி கையெழுத்திடாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்த ஆவணத்தில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்று மாத்திரமே முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மதங்களை பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதேபோல, யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் குறப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே டக்ளஸ் தேவானந்தா நேற்றைய ஆவணத்தில் கையெழுத்திட மாட்டேன் என மறுத்துள்ளார்.

இதையடுத்து அவசரகதியில் ஆவணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதம் குறித்து தற்போது அரசியலமைப்பில் உள்ளவாறே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினரை போல, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பாகவும் புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்தே, நேற்று ஈ.பி.டி.பியும் கையெழுத்திட்டது.

எனினும், பெரமுன கூட்டில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகள் எதுவும் இந்த விவகாரத்தை பற்றி மூச்சும் காட்டாமல் அடக்கமாக இருந்தமை குறிப்பிடத் தக்கது.