வெளிநாடு ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி!12 பேருக்கு 30 வருட சிறை வழங்கப்படுமா?

தடைச் செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட 12 சந்தேக நபர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு 30 வருட சிறைத் தண்டனை அல்லது ஆயுட் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று (31) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற செய்வதற்காக நிதி பங்களிப்பு செய்தமை தொடர்பில் டீ.ஏ.பி என்ற கட்சியின் மூன்று உள்ளூர் அரசியல்வாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல் ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராக விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதத்தில் மலேசிய பாதுகாப்பு பிரிவு நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் குறித்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்றும் (01) இடம்பெற்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியா தடை செய்தமை குறிப்பிடதக்கது.