விக்னேஸ்வரன் பயந்தார்!! தலை தெறிக்க ஓடிய ரெலோ தலைவர்கள்! அம்பலப்படுத்தினார் அனந்தி

தமிழ் மக்கள் அழிந்த போது ஓடாத ஓட்டத்தை சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த பின் அதனை நிறுத்துவதற்காக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஓடியிருந்தார் என தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளார் நாயகமும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீன குழு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் நாம் சிவாஜிலிங்கத்தை கட்டுப்பணம் செலுத்துவதறகு முன்னர் பேசியிருந்தார்கள். அதில் ஜோதிலிங்கம், நிலாந்தன், சின்மியாமிசன், ஜெயக்குமார் மதகுரு ஆகியோர் அங்கத்துவம் வகித்திருந்தனர்.

இதன்போது பொது வேட்பாளரை இறக்குவது தொடர்பில் நான் சிந்தித்து இருந்தேன் என்ற தகவலை தெரியப்படுத்தியிருந்தேன்.

சிவாஜிலிங்கத்தை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து சிந்தித்து உள்ளதாக தெரிவித்தேன். ஐ.நா சென்றவுடன் நான் இது குறித்து சிவாஜிலிங்கத்துடனும் பேசியிருந்தேன்.

ஐ.நா செல்வதற்கு முன்னர் முன்னாள் முதமைச்சர் சி.விக்கினேஸ்வரனிடமும் பொது வேட்பாளராக களமிறங்குமாறு கோரினேன்.

அப்போது அது பயம், பிரச்சனை, அவற்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். அவர் போட்டியிடமாட்டார் என்பது எனக்கு மிகத் தெளிவாக தெரியும். நீங்கள் இறங்காவிட்டால் நான் அல்லது சிவாஜிலிங்கம் இறங்குவதாக கூறிவிட்டு சென்று விட்டேன்.

நான் இறங்குவதாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியில் இறங்க வேண்டும். எங்களிடம் பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை.

அத்துடன் தமிழ் தேசியம் சார்ந்து உண்மையாக சிந்திக்கக் கூடியவர்கள் யார் என்ற பக்கமும் இருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிவாஜிலிங்கம் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புக்கள் இருந்தது.

கட்டுப்பணம் செலுத்தியதும் பல அச்சுறுத்தல்கள் வந்தது. சிவாஜிலிங்கம் காசு கட்டியதும், அவரது கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடுமையாக ஓடுப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

2009 ஆம் ஆண்டு நாங்கள் யுத்தத்தில் அழிவடைந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக ஓடாத ஓட்டம் எல்லாம் இப்பொழுது ஓடியிருந்தார்.

நாங்கள் செத்துக் கொண்டிருந்த போது பாராளுமன்றத்திற்கு முன்னால் ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் கூட 50 வீதமான இறப்பை குறைத்திருக்கலாம்.

ஆனால் அதை செய்யாது சிவாஜிலிங்கம் போட்டியிடுவதை நிறுத்துவதற்காக கடுமையாக ஒடியிருந்தார்.

மன்னாரில் இருந்து வவுனியா, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் என ஓடித்திரிந்தார். ஆனால் போட்டியிடுவது தொடர்பில் சில தகவல்களை சொல்ல முடியாத அச்சுறுத்தலான நிலை இருந்தது.

சிவாஜிலிங்கத்தின் போராட்ட வரலாறு என்னுடைய வயது. ரெலோ நிமிர்ந்து நிற்பதற்கான ஆணிவேர் சிவாஜிலிங்கம்.

3 ஆம் திகதிக்கு முன்னர் விலகுமாறு அவர்கள் சொன்னாலும் விலக முடியாது. இப்பொழுது அவர் ஒரு பொது வேட்பாளர்.

ஒரு குறியீடு. அவருடைய கட்சி தலைவர் கூறினால் கூட விலக முடியாத நிலையில் இருக்கின்றார். அப்படியாயின் ரெலோ தலைவர் வெளிப்படையாக மக்கள் முன் வந்து தமிழ் மக்களது இந்த இந்தக் கோரிக்கைளை எந்த வேட்பாளர் ஏற்றுள்ளார் என்ற உத்தரவாதத்தை பேசட்டும். அதன் பின் விலகுவது குறித்து சிந்திப்போம்.

ஆனால் நிச்சயமாக பொது வேட்பாளர் களமிறக்கியது இறக்கியது தான். அவருக்கு என்ன தான் துன்பம் நடந்தாலும் களத்தில் நிற்பார்.

கணிசமான வாக்குகளைப் பெறுவார். தனக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது என்பதை கட்சியினுடைய தலைவர் கூற வேண்டும்.

தனக்கு தனிப்பட்ட அழுத்தங்கள் அரசினால் ஏற்பட போகின்றதா என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தட்டும்.

மக்களுடைய நலன்சார்ந்து முடிவுகள் எட்டாதா ஒரு தலைவராக தான் நான் அவரைப் பார்க்கின்றேன்.

எனவே தன்னை பாதுகாக்க விரும்பினால் வெளிப்படையாக கூறட்டும். அவர் இப்போது ரெலோ இல்லை. ஒரு பொது வேட்பாளர். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவித்தார்.