அமைச்சர் மனோவின் பேச்சால் எழுந்துள்ள புதிய சர்ச்சை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ அவர்களும் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய விடயம் தொடர்பில் சமூக ஊடகமான முகப்புத்தகத்தில் மோதிக் கொண்டுள்ளனர்.

சஜித் பிரேமதாசின் வவுனியா தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் மனோகணேசன் பேசிய போது,

“அமைச்சர் ரிசாட் அவர்களை விளித்து பேசியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

அதற்கு அமைச்சர் மனோ கணேசன் கடுமையான வகையில் பதிலடி கொடுத்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு,

சஜித் பிரேமதாசவின் வவுனியா பிரசார கூட்டத்தில், கூட்டத்தை நடத்திய அமைச்சர் ரிசாட் பதியுதீனை, “வன்னி மாவட்ட அமைச்சர்” என்று சொல்லப் போய், “வன்னி மாவட்ட தலைவர்” என்று கூறி விட்டேன்.

இப்படி “வன்னி மாவட்ட தலைவர்” என்று அவரை பொதுவாக விளித்தது பொருத்தமானது இல்லை என்பதை உணர்கிறேன். என் சொற்பிரயோகத்தில் தவறுதலாக ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.

தவறு சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இந்த மனோ கணேசனிடம் எப்போதும் இருக்கிறது.

ஆனால் எனது உரையின் முதல் ஒரு வரியை பிடித்துக்கொண்டு, “இது கோத்தபாயவிற்கு மறைமுக ஆதரவானது” என கூவும் நீங்கள் என் முழு உரையையும் கேட்க வில்லையா?

சமீப காலத்தில் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் விமர்சிக்காத அளவுக்கு ராஜபக்ச குடும்பத்தை நான் விமர்சித்து இருக்கிறேன். இதை கவனத்தில் எடுக்காமல் என் கருத்து கோத்தபாயவிற்கு ஆதரவானது என முட்டாள்தனமான கருத்து கூறுகிறீர்களே!

என் வரலாற்றை மறந்து என்னை அறிந்த நீங்கள் இப்படி கருத்து கூறுவது எனக்கு மன வருத்தத்தை தருகிறது. உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

இது நேரடியாகவே கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வாக்குகளை சிறடிக்கிறது என்பதை உங்களால் உணர முடியவில்லையே? அவருக்கு கடிதம் எழுதுவதை தவிர உங்கள் கட்சி என்ன செய்கிறது?

இந்நிலையில், சஜித் பிரேமதாச அணியின் பிரதான ஒரு பங்காளி கட்சி தலைவரான என்னை பார்த்து இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?

இனி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என நான் கேட்கலாமா?

வன்னி பெருநிலத்தின் முல்லை, வவுனியா, மன்னார் மாவட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இன்று நிர்க்கதி நிலையில் வாழ்கிறார்கள்.

அநாதரவான பெண்கள், முன்னாள் போராளிகள், இடம் பெயர்ந்தவர்கள், யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்கள், வேலையில்லாத இளையோர் என வழி காட்டல் இல்லாமல் வன்னி பெருநில தமிழ் மக்கள் தவிக்கிறார்கள்.

முன்னாள் எம்.பியான நீங்கள் முகநூலுக்குள் ஒழிந்து அரசியல் செய்கிறீர்கள். சமூக ஊடகம் அவசியம். நானும் இங்கே உங்கள் எவரையும்விட காத்திரமாக இருக்கிறேன்.

ஆனால் இது மட்டும் என் பணி அல்ல. இதைவிட நேரடியாக மக்கள் மத்தியில் நான் எப்போதும், எந்த வேளையிலும் இருக்கிறேன்.

இப்போதும் கூட அதிகாலையில் எழுந்து பிரசார கூட்டத்திற்காக கண்டி நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.

கடுமையாக மக்கள் பணியில் என்னை ஆழ்த்திக்கொண்டுள்ளேன். பலனை எதிர்பாராமல் கடமையை செய் என்ற கீதை வாசகம் மட்டுமே என் மனதில் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கூட்டத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை, அமைச்சர் மனோ கணேசன் விளித்து கூறாமையினாலேயே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More