முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றி, ஆயிரக்கணக்கான தமிழர்களை மாற்றுத்திறனாளியாக்கி, பாடசாலைகளை அழித்து இராணுவ முகாம்களாக மாற்றிய கோட்டாபய ராஜபக்சவையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளதால் தமிழ் மக்கள் எவ்வாறு அவருக்கு வாக்களிக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க கல்வி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் – வேலனை பிரதேசத்தில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இராஜாங்க கல்வி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் மக்கள் முன்னிலையில் இந்தக் கேள்வியை முன்வைத்திருக்கின்றார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணம் வேலனை உட்பட வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் திறந்த சிறைக் கூடத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு வாழ்க்கையையே வாழ்ந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அந்த நிலமைகளை மாற்றி, தமிழர்கள் உட்பட நாட்டில் வாழும் அனைவரும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்த மாற்றத்தை மீண்டும் சீர்குலைத்து விடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.






