முன்னிலைக்கு வந்துள்ள சஜித் – புதிய யுக்தியை கையாளும் கோத்தபாய அணியினர்

இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது சம்பந்தமான சஜித் பிரேமதாசவுக்கு கோத்தபாய ராஜபக்சவும் இதுவரை சரி சமமான போட்டி நிலவியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தினால், இந்த நிலைமை மாறி, சஜித் முன்னணிக்கு வந்துள்ளதாக புதிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

காலி கராப்பிட்டியவில் அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கோத்தபாயவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர், பொதுஜன பெரமுனவின் தலைவர் இரவு உணவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரனவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் முன்னிலையில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்த போதிலும் தற்போது நிலைமை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களின் மாதவிடாய் காலத்திற்கான சுகாதார நேப்பின்களை இலவசமாக வழங்கும் யோசனையை சஜித் முன்வைப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அதனை கேலி செய்து, தமது தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்த விதம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறியகிடைத்துள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத வகையில் சஜித் மக்களை ஈர்த்துள்ள நிலைமையில், ஜனாதிபதித் தேர்தலில் சரிசமனாக இருந்த போட்டியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளின் ஆதரவு சஜித்திற்கு கிடைத்துள்ளதன் மூலம் மேலும் பின்னடைவான நிலைமை உருவாகியுள்ளது என கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், சில புள்ளிவிபரங்களை காட்டியதாகவும் அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நபர்களை தேர்தல் நெருங்கும் தருவாயில் சற்று ஒதுக்கி வைக்கவும் அடுத்த பொதுத் தேர்தல் வரை அமைச்சரவையை கோத்தபாய ராஜபக்சவுக்கு தேவையான வகையில் நியமிக்க உள்ளதாக பகிரங்கப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், கோத்தபாய தனது அமைச்சரவையை தான் விரும்பியபடியே தெரிவு செய்யவார் என பிரசாரம் செய்யும் பொறுப்பு விமல் வீரவங்ச உள்ளிட்ட பேச்சாளர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.