தமிழில் பேசவே கூடாது! தடை போட்டு தமிழர்களை சினம் கொள்ளச் செய்த உணவகம்! மும்மொழிகளிலும் பகிரங்க மன்னிப்புக்கோரியது…

பின்விளைவுகள் வரும் என்று தெரிந்திருந்தால் இதுபோன்றதொரு நடவடிக்கையினை நாம் மேற்கொண்டிருக்கமாட்டோம் என தனது ஊழியர்களை தமிழிலில் பேசக்கூடாது என்று தடைவிதித்திருந்த உணவகத்தின் உரிமையாளர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தை பெப்பர்மின்ட் கபே (Peppermint Café) நிறுவனத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் அங்கே பணிபுரியும் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் தமிழிலில் கட்டாயம் பேசக் கூடாது என்றும் தடைவித்திருந்தது.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் கடும் கண்டனங்களும் எதிர்ப்புக்கள் வெளிவந்தன. இதனையடுத்து இணையத்தளவாசிகள் செய்த செயற்பாடுகளினால் அந்த உணவகத்தின் தரப்படுத்தலும் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

இந்தநிலையில் இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அமைச்சரின் பணிப்புரையின் பேரில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவர், இந்நிறுவனத்திடம் இச்சம்பவம் தொடர்பில் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

இக்கடிதத்துக்கு பதிலாக குறிப்பிட்ட நிறுவனத்தினர் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான விளக்க கடிதங்களில், இந்த அறிவிப்பு பலகையில் காணப்பட்ட வாசகங்கள் தொடர்பில் மன்னிப்பு கோரி, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ கடந்த 30ஆம் திகதி தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கான பதிற்கடிதமே இதுவாகும். கடந்த 29ஆம் திகதி நமது பெப்பர்மின்ட் கபே ப்ரைவேட் லிமிடட் இல் ஊழியர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைக்கள் எழுந்தன.

முதலாவதாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், அவ்வறிவித்தல் பலகை காரணமாக தமிழ் பேசும் நெஞ்சங்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் முழுமனதோடு மன்னிப்புக்கோருகின்றேன்.

இத்தால் தங்களுக்கு அறியத்தர விரும்புவது என்னவென்றால் அவ்வறிவித்தல் பலகையை நாம் வைகாசி மாதம் ஊழியர்களின் கண்பார்வைக்கு எதிரே கொண்டுவந்தோம்.

இவ்வறித்தலை நாம் காட்சிப்படுத்தியமைக்கான காரணம் நமது ஊழியர்கள் தமிழிலில் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயடுத்தியமையினாலும் இவ்வார்த்தைப் பிரயோகத்தால் எமது பல்மொழி பேசும் வாடிக்கையாளர்கள் சிலர் நமக்கு புகார் அளித்தமையினாலும் நாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டோம்.

எமது உணவகத்தில் 80 வீதமான ஊழியர்களின் தாய் மொழி தமிழ் ஆகும். நாம் அவ்வறிவித்தல் பலகையை ஒருநல்ல நோக்கத்திற்காகவே காட்சிப்படுத்தினோம் தவிர, வேறுஎந்த நோக்கமும் இல்லை என்பதை தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

இவ்வறித்தல் காரணமாக இவ்வாறான பின்விளைவுகள் வருமமென்று அறிந்திருந்தால் நாம் அந் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கமாட்டோம்.

நான் இவ்வறித்தலை மேற்கூறிய காரணங்களுக்காகவே நடைமுறைக்கு கொண்டு வந்தேன். மீண்டும் நடந்த இந்த சம்பவத்திற்காக உரிமையாளர் என்ற வகையில் பகிரங்க மன்னிப்பைக்கோரிக் கொண்டு இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.