விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வெளிநாடு ஒன்றில் திடீர் திருப்பம்! குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

மலேசியாவின் சிரம்பான் ஜெயா பகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீது சுமத்தப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் விண்ணப்பத்தை சிரம்பான் அமர்வு நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர் அஸ்லிண்டா அஹாட் அவ்விண்ணப்பத்தை நீதிபதி மடிஹா ஹாருல்லா முன் கொண்டு வந்தார்.

முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளின்படி, குணசேகரன் தனது அலுவலகம் மற்றும் இல்லத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருப்பதாக கூறப்பட்டது.

ஒக்டோபர் 10ம் திகதி முறையே காலை 9.58 மற்றும் காலை 11.50 மணிக்கு எண்.2844, ஜாலான் எஸ்.ஜே 3/6பி, சிரம்பான் ஜெயாவிலும், எண்.139, கம்போங் பாரு ராஹாங், சிரம்பானிலும் அக்குற்றங்கள் செய்யப்பட்டத்தாகக் குற்றம் சுமத்தப்பட்டன.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளின் போது குணசேகரன் நீதிமன்றத்திற்கு வருகைத் தரவில்லை.

மேலும் ஆர்.எஸ்.என். ராயர் தலைமையிலான நான்கு வழக்கறிஞர்கள் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார்.

கடந்த ஒக்டோபர் 29ம் திகதி மலாக்கா அமர்வு நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுகளுக்கு ஆதரவு அளித்ததன் பேரில் குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஒக்டோபர் 31ம் திகதி கூடுதல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ராயர், ​​இந்த நடவடிக்கைக்கு தாம் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

“குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இன்று காலை எங்களுக்கு இது அறிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இரண்டு குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்தது. ஆயினும், எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

இதர நீதிமன்றங்களிலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இதனைச் செய்வார்கள் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்தார்.