என்னுடைய அருமை தலைவர் பிரபாகரனுக்கு தெரியும்! கருணா

“என்னை உள்ளே வைத்தால் ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால் அவர்தான் எனக்கு ஆயுதம் தந்தவர்.

என்னை பயங்கரவாதி என்றால் ஆயுதம் தந்தவரையும் கைது செய்ய வேண்டும் என” முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைகுடியிருப்பு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எல்லோரும் ஜனாதிபதி தேர்தலில் நன்றாக பேசி வருகிறார்கள். உங்களுக்கு தெரியும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக, ஒருபோதும் இல்லாத வகையில் மாற்றமடைந்து வருகின்றது.

ஏனென்றால் தமிழர்களின் இருப்பை பாதுகாத்துகொள்வதா? முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா? என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது.

இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதா? சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும்.

நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கம் வந்தது 100 நாளைக்குள் பல வேலைத்திட்டங்களை செய்வோம் என்றார்கள். ஒன்றுமே நடைபெறவில்லை. மாறாக பழிவாங்கும் படலத்தைதான் கையிலெடுத்தார்கள் .

என்னையும் கைது செய்தார்கள். தான் நான் சொன்னேன் என்னை உள்ளே வைத்தால் ரணில் விக்ரமசிங்கவையும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

ஏனென்றால் அவர்தான் எனக்கு ஆயுதம் தந்தவர். என்னை பயங்கரவாதி என்றால் ஆயுதம் தந்தவரையும் கைது செய்ய வேண்டும் என்றபடியால் தான் என்னை விட்டார்கள். இப்படி பழி வாங்கும் வேலைகளை செய்தார்களே தவிர எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை.

2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கதையை கேட்டு நடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தார்கள். அவர்தான் களத்தில் நின்று போரை வழி நடாத்தினார்.

அப்போது இரா. சம்பந்தன் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க சொன்னார். அவர்தான் நேரடியாக இன அழிப்பு செய்தார். அன்று மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.

ஏற்றுக்கொள்ள முடியாத 13அம்ச கோரிக்கைகளை கொண்டு தமிழீழ பற்றாளர்களாக காட்டி கொண்டு பிழைப்பு நடாத்துவதற்காக கொண்டுவந்த கோரிக்கை தான் அது. அவர்கள் நல்லவர்கள் என்றால் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கில் கூட இருக்காது. இந்த தடவை கிழக்கை விட வடக்கில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள். அந்தளவிற்கு அங்கு தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இங்கும் தமிழ் மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்க வேண்டும். அப்போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் . கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடார்த்தி வருகின்றனர். இன்னும் தீர்வு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நாங்கள் சொன்னோம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தான் கேட்டோம் . அப்போது அவர் கேட்டார், அம்பாறை பிரச்சினைகளை ஏன் இங்கு கதைக்கிறீர்கள் என்றார்.

நான் சொன்னேன் இது அம்பாறை பிரச்சினை இல்லை இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை என்றேன். உடனே கல்லடியில் கல்முனை வடக்கு பிரதேச தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக பேசினார்.

முஸ்லிம் தரப்பு எல்லை நிர்ணயம் செய்யாமல் தடுப்பதேன். அவர்கள் களவெடுத்து வைத்த காணியெல்லாம் பிடிபடும் என்றுதான். இதற்கு தீர்வாக நாம் கிழக்கில் மொட்டுவிற்கு வாக்களிப்போமானால் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

1983 யூலை கலவரம், சத்துருக்கொண்டான் படுகொலை தொடக்கம் இந்த நாட்டிலே இன முறுகலை தோற்றுவித்து பாரிய யுத்தம் நடைபெற வழி வகுத்தது ஐக்கிய தேசிய கட்சியும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான்.

அவர்கள் தான் உண்மையான தமிழின படுகொலையாளிகள். யுத்தத்தை முடித்து வைத்தது மகிந்த ராஜபக்ச. இன்று நன்றாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் உணர்வுகளை மறக்கவில்லை. தலைவர் பிரபாகரனை ஒருநாளும் குற்றம் சாட்டவில்லை.

என் அண்ணனை கூட சுட்டது விடுதலை புலிகள் தான். அது அவர்களின் இயலாமை . அதற்காக தலைவர் பிரபாகரன் சாகும்வரை என்னை குற்றம் சாட்டவில்லை. போராட்டத்தில் என்னுடைய அருமை தலைவருக்கு தெரியும். என்னுடைய கதையை அன்று கேட்டிருந்தால் அழிவை தடுத்திருக்கலாம்.

நேற்று மட்டக்களப்பில் ரணிலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், யோகேஸ்வரன் கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் .

என்ன மொழியில் பேசினார்கள் என்று தெரியாது அவர்களுக்கு சிங்களம் தெரியாது . இப்போது சஜித் பிரேமதாசவிற்கு வாக்கு கேட்கும் முஸ்லிம் தலைவர்கள் பெரும் இனவாதிகளாக இருக்கின்றனர்.

அவர்களுடன் தமிழர்கள் சேர்வதுதான் துயரம். முஸ்லிம் அரசியல் வாதிகள் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்றை சொல்கிறார்கள்.

தமிழ் மக்களுக்காக சர்வதேசத்தில் பேச்சுவார்த்தை நடாத்தியவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன்.

சம்பந்தரோ, மாவையோ, சுமந்திரனோ பேச்சுவார்த்தை நடாத்தவில்லை . ரணில் ஒரு குள்ள நரி. அவரை நம்ப முடியாது. மஹிந்த சண்டித்தனம் பிடித்தவர். அவரை நம்பலாம் என்று அன்ரன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்.

ரணிலின் அரசாங்கம் தான் படுகொலை செய்தது என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இன்று ரணிலுடன் சேர்ந்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடக்கி வைத்தவன் நான்தான். சிவராம் என்ற ஊடகவியலாளர்தான் நாங்கள் யுத்தம் செய்யும் போது இராணுவ புத்தகங்களை எடுத்து தந்தவர் அவர்தான் சிறந்த ஆய்வாளர்.

அவர்தான் அரசியல் சிந்தனையையும் பாராளுமன்றத்தில் எமது குரல் ஒலிக்க செய்ய வேண்டும் என முடிவெடுத்து வன்னியில் வைத்து ஒப்பந்தங்களை செய்துதான் பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம்.

யுத்தம் முடிய உடைத்துக்கொண்டு ஏமாற்ற தொடங்கி விட்டனர். அதற்காகத்தான் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவால் கூட்டமைப்பு உடையும்.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கைசாத்திட்டுள்ளேன். 12,000 போராளிகளை எனது பொறுப்பில் எடுத்து விடுவித்துள்ளேன் .

இந்த தடவை இவற்றை கணக்கிலெடுத்து கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.