கோட்டாவிற்கு போடாவிட்டாலும் பரவாயில்லை சிவாஜிக்கு போடுங்கள் என நாமல் சொல்வதன் பின்னணி என்ன?: மனோ கேள்வி!

சஜித்திற்கு வாக்களிக்காமல் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதும், சிவாஜிக்கு வாக்களிப்பதும், அநுரவிற்கு வாக்களிப்பதும், ஜேவிபிக்கு வாக்களிப்பதும், தேர்தலை பகிஸ்கரிப்பதும் ஒன்றுதான் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

கிளிநொச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று (8) கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பார்த்து மஹிந்த ராஜபக்சவின் பட்டாளம் சில நரித்தனமான தந்திரங்களை முன்னெடுக்கிறார்கள். நாமல் இங்கு குடிபுகுந்து கெஞ்சிக்கூத்தாடி நடந்தவற்றையெல்லாம் மறக்கும்படி கேட்டார். எமக்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை, தமிழ் வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி கேட்கிறார்கள். தமிழ் வேட்பாளராக நண்பர் சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார்.

அவர் மீது எனக்கு கோபம் வராது. நான் கோபப்படுவது அவர் மீதல்ல. போட்டியிட அவருக்கு உரிமையுள்ளது. ஆனால் எமக்கு வாக்களிக்காவிட்டால், அவருக்கு வாக்களியுங்கள் என ஏன் நாமல் ராஜபக்ச கேட்கிறார்? அதில்தான் தந்திரம், சூட்சுமம் தங்கியுள்ளது.

சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை, சஜித் அல்லாத சிங்கள வேட்பாளருக்கு போடுங்கள் என்கிறார்கள். தனக்கு போடுங்கள், இல்லாவிட்டால் சிவாஜிக்கு போடுங்கள், அதுவுமில்லாவிட்டால் ஜேவிபிக்கு போடுங்கள்… அதுவும் முடியாதா, தேர்தலை பறக்கணியுங்கள் என்கிறார்கள். சஜித் பிரேமதாசவிற்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என்கிறார்கள்.

சஜித்திற்கு போடாமல் கோட்டாவிற்கு போட்டாலும் ஒன்றுதான், சிவாஜிக்கு போட்டாலும் ஒன்றுதான், ஜேவிபிக்கு போட்டாலும் ஒன்றுதான். பகிஸ்கரிப்பதும் ஒன்றுதான். இந்த குள்ளநரி தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் இறுதிச்சுற்றில் இருப்பது இருவர். இருவரில் ஒருவருக்குத்தான் போட வேண்டும். கோட்டாவிற்கு போட்டால், வந்து போடுவார். அதுதான் உண்மை.

போட வேண்டுமென்றால், கடத்த வேண்டுமென்றால், காணாமல் போக வேண்டுமென்றால், அடிஉதை வாங்க வேண்டுமென்றால், இனவாதம், மதவாதம் வேண்டுமென்றால், கெடுபிடி வேண்டுமென்றால், நாட்டை விட்டு துரத்தப்பட வேண்டுமென்றால் போடுங்கள் கோட்டாவிற்கு.

நாட்டில் அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, அதிகாரத்தை பிரித்து வாழ வேண்டுமென்றால் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள்.