அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். சன்னி வக்பு வாரியத்துக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியோர் உரிமை கொண்டாடினார்கள். இதை சரிபாதியாகப் பிரித்துக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17ம் திகதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தனர்.


தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘இருதரப்பிலும் வழிபாடு நடத்துபவர்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நடுநிலையுடன் நீதிமன்றம் அணுகும். இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஷியா வக்பு வாரியம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த நிலம் ஷியா வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது அல்ல. அது வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, அரசுக்குச் சொந்தமானது என்பதால் ஷியா வக்பு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. அதேசமயம், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியின் கீழ்பகுதியில் இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களின் கட்டிடமும் அல்ல. அதேசமயம், கோயில் இடிக்கப்பட்டுதான் கட்டப்பட்டதா என்றும் கூறவில்லை

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அயோத்தியா சட்டம் 1993இன் கீழ் அடுத்த 3 மாத காலத்துக்குள் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதற்காக தனியாக அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தி, கோயிலைக் கட்ட வேண்டும். கோயிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி ஆகியவற்றை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு. முஸ்லிம்களுக்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலம் அவர்கள் கேட்கும் சரியான இடத்தில் வழங்க வேண்டும்’ இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like