அலி சப்றியால் கோத்தபாயவிற்கு புதிய நெருக்கடி! மொட்டுக் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

கோத்தபாய ராஜபக்சவின் பிரதான சட்ட ஆலோசகரும் அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய நபராக செயற்படும் சட்டத்தரணி அலி சப்றியின் கருத்துக்கள் மற்றும் செயல்கள் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சியின் தலைமையிடம் கருத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இப்படியான முக்கியமான தேர்தல் பிரசார கட்டமைப்பில் அரசியல் தெரியாத அலி சப்றி போன்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பது கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலில் மது மாதவ அரவிந்த பிவித்து ஹெல உறுமயவில் இருந்து நீக்கப்பட்ட போது, தானே கோத்தபாய ராஜபக்சவுக்கு அழுத்தங்களை கொடுத்து அவரை நீக்கியதாக அலி சப்றி கூறியதன் மூலம் சிங்கள வாக்கு வங்கிக்கு சேதத்தை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அடிவாங்க நேரிடும் என கூறி முஸ்லிம் வாக்கு வங்கிக்கும் தேசத்தை ஏற்படுத்தினார்.

மூன்றாவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அடிப்படைவாதிகள் இருப்பதாகவும் மருத்துவர் ஷாபியின் நாடகம் அவர்களின் உருவாக்கம் எனக் கூறி கட்சிக்கு அவமதிப்பை ஏற்படுத்தினார்.

அது மாத்திரமல்ல கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை சம்பந்தமான ஆவணங்களை சாதாரண மக்களுக்கு காட்ட வேண்டிய தேவையில்லை எனக் கூறி, சாதாரண மக்களின் கோபத்தை தூண்டியுள்ளார்.

அத்துடன் அந்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்து, மற்றுமொரு சிக்கலை உருவாக்கினார்.

இறுதியாக கோத்தபாய ராஜபக்ச கையெழுத்திடாத சத்திய கடிதம் ஒன்றை பகிரங்கப்படுத்தி அவரது தேர்தல் பிரசாரத்தை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றார் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையிடம் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சட்டத்தரணி என்ற வகையில் அலி சப்றி மிகவும் திறமையானவர் எனவும், தனது தரப்பு வாதிகளை அச்சுறுத்தி கட்டணத்தை தீர்மானிக்கும் விதத்தில் சாதாரண மக்களை அச்சுறுத்தி வாக்குகளை பெற முடியாதென்பது அவருக்கு புரியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அலி சப்றி கோத்தபாயவின் வாக்குகளை சிதறடிக்கும் இயந்திரம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.