கோத்தபாய ராஜபக்ச குறித்து விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிச்சை!

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்கலை விட மோசமான நிலை உருவாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 5 வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் வடக்கில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 30 வருடகாலமாக யுத்தத்திற்கு முகம் கொடுத்த தமிழ் பேசும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள், அபிவிருத்திகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

போரை முடித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கை காட்டி சர்வதேசத்திடம் நிதிகளைப் பெற்று வடக்கு, கிழக்கு தவிர்ந்து ஏனைய 7 மாகாணங்களை அபிவிருத்தி செய்த வரலாறு தான் உள்ளது.

ஆனால், ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் முதலில் கொழும்பு காலிமுகத்திடலில் முதன் முதலாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

தேசிய கீதமானது மாற்று மொழியில் பாடும் வரலாறு தான் இருந்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் அதை மாற்றியமைத்தோம். கடந்த 25, 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 75 வீதமான காணிகளை வடக்கு – கிழக்கு பகுதிகளில் விடுவித்துள்ளோம்.

வலிவடக்கு பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் 5000 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்தோம். மீள்குடியேற்ற அமைச்சு, கல்வி அமைச்சு, வீடமைப்பு அமைச்சு ஊடாக பல வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு அதிக நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் 2500 உடற்பயிற்சி ஆசிரியர் கல்வி அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் தொகையை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றோம். சாதாரண தரம் கற்று விட்டு உயர்தரம் கற்க முடியாத மாணவர்களுக்காக 13ம் தரக் கல்விக்காக 26 கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளோம்.

வடக்கு- கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 90 ஆயிரம் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள், 12 ஆயிரம் முன்னாள் போராளிகள், 50 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள், பெற்றோரை இழந்து அனாதை இல்லத்தில் 6 ஆயிரம் சிறார்கள் இருக்கிறார்கள்.

கடந்த கால அரசாங்கம் இவர்களுக்கு எந்தவித தீர்வையும் வழங்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் இவர்களுக்கான நிதியை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இவ்வாறான பாதிப்புக்கள் இருக்கின்றது என்பது சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமானால் எமது வாக்கை நாங்கள் வழங்க வேண்டும்.

கடந்த கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்கலை விட மோசமான நிலை உருவாகும். மாற்று அரசாங்கம் வந்தால் மீண்டும் எமது இளைஞர், யுவதிகள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். வெள்ளைவான் காலாசாரம் வரும். கிறீஸ் பூதம் வரும்.

வாள்வெட்டு கலாசாரம் வரும். பள்ளிவாசல்கள், ஆலயங்கள் உடைக்கப்படும். ஆகையால் இவற்றை நாம் இல்லாது ஒழிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கு உங்களது வாக்கை அளிக்க வேண்டும். அதன் மூலம் ஜனநாயக நாட்டை உருவாக்குவோம்” என்றார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like