பிள்ளையானின் TMVP மட்டக்களப்பில் பரவலாக அதிரடித் தாக்குதல்

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரதேசங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் தாக்குதல் மற்றும் கைகலப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சித்தாண்டி மற்றும் வாகரை தட்டுமுனை ஆகிய பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் முரளிதரன் தலைமையிலான குழுவினர் சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அங்கு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த புவிதரன் என்பவர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதேசசபை உறுப்பினரால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று வாகரை தட்டுமுனை பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பிரதிகரன் என்பவர் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ரெஜிகரன் என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இதேபோன்று நாசிவன்தீவு பிரதேசத்திலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றும் மட்டக்களப்பில் ஐ.தே.கவின் ஆதரவாளர்களை தாக்கினார்கள் என ஐந்து பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் என ஐதேகவினர் தெரிவித்துள்ளனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like