2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற றோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே தனக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில், ஒருபோதும் எவருக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்றும், நடந்ததற்கு வெட்கப்படுவதாகவும் கூறியே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
“நான் தவறு இழைத்தேன், அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, ஆனால் நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.
எனது விடுதலை கடந்த 3 வருட காலம் பரிசீலிக்கப்பட்டு வந்தது. அது இப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல. அத்தோடு அதில் எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.
சிறைக்குள் இருந்து கல்விகற்று கடந்த 15 வருட காலம் என்னை நான் வருத்தி திருத்திக் கொண்டேன். யுவோன் என் மனதிலிருந்து நீங்க மாட்டார். அவரின் குடும்பத்திடம் பாவமன்னிப்பு கேட்க முயற்சித்தாலும் அதற்கு சாத்தியம் ஏற்படவில்லை” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ராஜகிரியாவில் உள்ள றோயல் பார்க் வீட்டு வளாகத்தில், யுவோன் ஜோன்சன் என்ற 19 வயதான சுவீடன்-இலங்கை வம்சாவளி யுவதியொருவர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே தள்ளி விழுத்தி கொல்லப்பட்டார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 வயதுடைய ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவேயை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அவரது இந்த முடிவு பொதுமக்கள், சில அரசியல்வாதிகள் மற்றும் பலர் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






