யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவது பிரதிவாதியான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மன்றில் ஆஜராகிய போதும், இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் மன்றில் ஆஜராகாத நிலையில்,இரண்டாவது பிரதிவாதி இன்றி வழக்கிற்கான விளக்கத்தை முன்னெடுப்பதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜனின் தாயார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் சாட்சியமளித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் தனது மகனுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அவர் எங்குள்ளார் என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜனின் தாயார் சாட்சியமளித்துள்ளார்.

தனது மகன் காணாமல்போனமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட வேறு எங்கும் முறைப்பாடு செய்யவில்லை எனவும்,அவரை தேடும் பணிகளையும் தாம் முன்னெடுக்கவில்லை எனவும் தாயார் சாட்சியமளித்துள்ளார்.

தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையை அறிந்துகொண்டதன் பின்னர் , ஶ்ரீகஜன் சட்டரீதியாக நாட்டிலிருந்து வெளியேறியமைக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.